புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான யோசனை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
“புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான ஒரு முறையை மேற்கொள்ள வேண்டும் என்பதே நமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை நாங்கள் எப்படியாவது செயற்படுத்துவோம்,” என்று விஜித ஹேரத் அறிவித்தார்.
மேலும், “தற்போது மக்கள் எதனை கோருகின்றனர் என்பது தெளிவாக உள்ளது. அவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வர விரும்புகின்றனர். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, “அரசாங்கமாக நாங்கள் இன மற்றும் மதவாதத்திற்கு எதிராக செயற்படுகிறோம். அந்த நம்பிக்கை மக்களின் மனதில் உள்ளது,” என்று விஜித ஹேரத் முன்னிட்டு கூறினார்.