இலங்கையில் விரைவில் 19 கொலைகள் நடைபெறும் எனும் அதிர்ச்சி தகவல் புலனாய்வுத்துறையின் மூலம் வெளியாகியுள்ளது. கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த சதி இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் கும்பல்களால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க தகவல் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு இரகசிய அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மேற்கு தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இந்த கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சதியில் ஈடுபட்டுள்ள பாதாள உலகக் குழுக்கள் மற்றும் கொலை இலக்குகள் குறித்த இரகசிய புலனாய்வு அறிக்கைகள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்ட ஒரு அமைப்பின் தலைவரின் சகோதரரை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.