இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரான பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருப்பதாக கூறியிருந்தாலும், அதுவே போதுமானதாக அல்ல என்றும், “அதற்கு அப்பால் நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்ற கேள்வியை முன்வைத்து, இந்த விவகாரம் குறித்து சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் இன்று (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில், IDM Nations Campus இனால் ஏற்பாடு செய்யப்பட்ட EdHat International கல்வி நிலையத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாட்டில் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தார்.
பேராசிரியர் மஹநாமஹேவா, சர்வதேச மனித உரிமைகள் தினம் (10 ஆம் திகதி) முன்னிட்டு, அதன் தொனிப்பொருளை பற்றி விவரித்து, மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சாசனங்கள் மற்றும் பிரகடனங்களை பற்றி கருத்து தெரிவித்து, அவை அரசாங்கங்களால் கடைபிடிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதன் பிறகு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 51/1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பற்றி மஹநாமஹேவா கருத்து தெரிவித்து, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் நிகழ்ந்த மீறல்களைப் பற்றிய ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன், மனித உரிமைகள் தொடர்பான நிலவரத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சூழ்நிலையில், தற்போது அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நிராகரித்திருக்கின்ற போதிலும், “எனினும், அது மாத்திரம் போதுமானதில்லை” எனக் கூறி, அதற்கு அப்பால் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பற்றி ஆராய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ள போதிலும், அதன் செயல்பாடுகளை பற்றிய கேள்வி எழுப்பிய பேராசிரியர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்பதாக நாம் பொருத்தமானதொரு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவேண்டும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளை பரிசோதிப்பதற்கான பொருத்தமான உள்ளகப்பொறிமுறையையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.