பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 529 பேர் உள்ளிட்ட 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். இது பொதுவாக வாகன விபத்துகளை குறைத்து, உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியவர்கள், அதிக வேகத்தில் பயணித்தவர்கள், விதி மீறியவர்கள், அனுமதிபத்திர உரிமை மீறியவர்கள், மற்றும் ஏனைய போக்குவரத்து குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் 7,264 பேர் ஆகின்றனர்.
போதையில் வாகனம் செலுத்துவோருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகன சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம், மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் இரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் இதேபோல் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.