இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும், விரைவுடனும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டின் அடிப்படையில், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சிகளை ஐ.நா ஆதரிக்கத் தயாராக உள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட கூட்டுப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடும் அரசின் முயற்சி, நாட்டில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய முக்கியமான படியாக ஐ.நா பாராட்டுகிறது.
பல ஆண்டுகளாக தங்கள் உறவுகளைத் தேடி வருகிற காணாமல் போனோர் குடும்பங்களுடன் ஐ.நா உறுதியுடன் நிற்கிறது. “இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், தங்களது பணியை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்த்தியுடன் முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளை மதிக்கும் கலந்துரையாடல்களுடன் செயல்பட வேண்டும்,” என ஜெனீவாவில் கூறப்பட்டுள்ளது.
