மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ், கிழக்கில் உள்ள மனித புதைகுழிகள் அகழப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் அவர், “தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில் மனித புதைகுழிகள் தமிழின அழிப்பின் ஆதாரமாக இருக்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.
1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ராணுவ ஆக்கிரமிப்புக்கு பிறகு ராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசாமி சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், செம்மணி புதைகுழியில் 400க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி சோமனரத்ன ராஜபக்ச வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார் என கூறினார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழி மீண்டும் அகழப்பட்டு தற்போது வரை 133க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது போன்ற புதைகுழிகளை முறையாக அகழ்ந்து உண்மைகளை வெளிக்கொணர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
