குமாரபுரம் கிராமத்தில் 11.02.1996 அன்று இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்த 26 பேரின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்றைய தினம் (11.02.2026) காலை 10.00 மணிக்கு குமாரபுரத்தில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உயிர்நீத்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டதுடன், தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும், “உள்ளக நீதிப் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாகவே குமாரபுரம் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தி, சர்வதேச நாடுகளுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வு துயரத்தை நினைவுகூர்ந்ததுடன், நீதி கோரும் உறுதியையும் மீண்டும் வெளிப்படுத்தியதாக அமைந்தது.







