தையிட்டி விகாரையைப் பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது, அதனாலே அது அகற்றப்படவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ரஜீவ்கான் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

“வடக்குக் கிழக்கு பகுதிகளின் தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் பல முறைகளில் நடைபெற்றுள்ளன. நாங்களும் அதற்கான எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம். இன்று தையிட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் சில விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து, சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் உதவியுடன், இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டியுள்ளனர்.
பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் காணியை தனக்கு சொந்தமானது என்று கூறி, எந்தவொரு பொறுப்புமின்றி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சட்டப்படி, ஒருவருடைய இடத்தில் சென்று கட்டிடத்தை கட்டினால், அந்த இடம் அகற்றப்பட்டு, அதன் உரிமையாளருக்கு மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.
இந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது, அது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு அல்லது அதிகாரப்பூர்வமாக உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தாது. இந்த சட்டம், பௌத்த பேரினவாதத்திற்கு மாத்திரம் விதிவிலக்காக இருக்கக் கூடாது என்பதையும் நாம் தெரிவிக்கின்றோம்.
எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக உள்ளவர்கள், அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களின் தேவைகளுக்கேற்ற முறையில் சட்டங்களை வளைத்துக்கொள்கின்றனர். இது தொடர்ந்து இந்த நாட்டில் நடைபெறுகிறது.
தையிட்டி விகாரையைப் பொறுத்தவரை, அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது, அது அகற்றப்படவேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம். அந்த மக்கள் வேறு இடத்தில் தங்களுக்கான காணி பெற தயாராக இல்லை.
அதிகாரம் பெற்றவர்களில், ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றபோது மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. ஜனாதிபதி எந்த பதிலையும் அளிக்கவில்லை, ஆனால் ஆளுநர் இடையில் குறுக்கிட்டு, ‘நாங்கள் அவர்களிடம் பேசிவிட்டோம், அவர்களுக்கு வேறு காணிகள் வழங்கப்படும், உரிமையாளர்கள் வேறு காணிகளை பெற தயாராக உள்ளனர்’ என கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காணி உரிமையாளர்கள், ‘நாங்கள் வேறு காணிகளை பெறத் தயார் இல்லை’ என தெரிவித்தனர்.”