தமிழ்த் தேசிப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர், காவல்துறையால் கைது செய்யப்பட்டு மருதானை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.
மருதானை காவல்துறையினர் இந்த மரணத்தை தற்கொலை என்றும், பெண் கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியினை அறிந்த தென்னிலங்கை ஊடகவியலாளர்கள், இம்மரணம் தொடர்பாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் காவல்துறையினர் பலமுறை பொய்க்குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.