திருகோணமலை துறைமுகத்திற்கு இன்று (11 ஆகஸ்ட்) காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். ரனா வந்தடைந்தது. இக்கப்பலை இலங்கை கடற்படை பாரம்பரிய கடற்படை மரபுகளின்படி வரவேற்றது.

147 மீட்டர் நீளமுடைய இக்கப்பல் 300 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகிறது. கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், குழுவினர் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல்வேறு பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், நாட்டின் பல சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட உள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படையினருக்கான யோகா நிகழ்ச்சி ஒன்றையும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளனர். அதோடு, இலங்கை கடற்படையினர், கப்பல் குழுவினருக்காக சித்திரிப்புப் (simulation) பயிற்சிகளையும் நடத்தவுள்ளனர்.
இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு வரும் வியாழக்கிழமை (14 ஆகஸ்ட்) தீவை விட்டு புறப்பட உள்ளது.
