இங்கிலாந்தில் உள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை – ஐக்கிய இராச்சியக் கிளை நடத்தி வரும் வருடாந்திர தமிழ்த்திறன் போட்டி – கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-12-2025)அன்று சிறப்பாக நடைபெற்றது. திருக்குறள், பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை, வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ்மொழியை நேசிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். காலை 9.00 மணிக்கு பதிவுகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு, அகவணக்கம், அறிவிப்புகள், பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் இளையோரின் தலைமையில் அழகாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றன.

இந்நிகழ்வை சிறப்பாக அமைத்ததில் இளையோரின் பங்களிப்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் மேற்கொண்ட தன்னார்வச் செயற்பாடும், ஒழுங்கமைப்புத் திறனும் விழாவின் வெற்றியை மேலும் உயர்த்தியது.
மேலும், போட்டியில் பங்கேற்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள், பேரவைத் தொண்டர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர் அனைவருக்கும் பேரவை சார்பில் இதயப்பூர்வ நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

தமிழ்மொழிக்காக ஒன்றுபடும் இத்தகைய அற்புதமான நிகழ்வுகள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
