கல்வி சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட பரந்த விளக்கத்தை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளியை நீக்கி, தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். .
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணைந்த நிறுவனங்களான ஆசிய ஆசிரியர் மேம்பாட்டு மையம், தேசிய கல்வி ஆணைக்குழு, அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதை ஒரு வேலையைத் தாண்டிய தேசியப் பொறுப்பாகக் கருதுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
கன்னங்கரா கல்விச் சீர்திருத்தங்களினால் ஏற்பட்ட கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவைப்படுவதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
தேசிய கல்வி முகாமைத்துவ முறையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய நவீன தொழில்நுட்ப உலகத்துடன் இணக்கமான எதிர்கால சந்ததியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மோசடியான பட்டப்படிப்பு நிறுவனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது, அதற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் அரசு சாராத உயர்கல்வி நிறுவனங்களின் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.