சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
“புதிய அமைச்சர்கள் பதவியேற்று ஐந்து வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்களை நேரில் சந்திக்க முடியவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், “இலங்கைக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியில் அமைச்சரவை அயராது உழைத்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகள் நாட்டை நெருக்கடியில் ஆழ்த்தியதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர். இந்த ஐந்து வருட காலத்தில் நாட்டை முன்னேற்றாமல், வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், அது நாட்டை முன்னேற்றாது” என்றும் அவர் கூறினார்.