முல்லைத்தீவு, குருந்தூர்மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வரும் காணி உரிமையாளர் ஒருவர், குருந்தூர்மலை விகாராதிபதியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் இன்று (10.05.2025) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குருந்தூர்மலையின் கீழ்ப்பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பௌத்த பிக்கு ஒருவர் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
இந்நிலையில், குமுழமுனை தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யும் நோக்கில், குறித்த காணி உரிமையாளர் தனது பணியாளர்களைக் கொண்டு இன்று காலை உழவு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், காவல்துறையினருடன் இணைந்து விவசாய நடவடிக்கையைத் தடுத்துள்ளனர். மேலும், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் கைது செய்து, உழவு இயந்திரத்தையும் முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த காணி உரிமையாளர் இதய நோய்க்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பணியாளர்கள் விவசாயப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அப்போதுதான் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, விவசாயப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.