வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம், இம்முறை காய்ந்த நெல்லை கிலோ ஒன்றை 125 ரூபா வீதம் மற்றும் காயாத நெல் கிலோ ஒன்றை 115 ரூபா வீதம் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ந. ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் குறித்து அவர் கூறியதாவது:
“தற்போதைய காலபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பித்துள்ளது. இதன் பிறகு எமது விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு, பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு உதவவுள்ளன. அதில் காய்ந்த நெல்லை 125 ரூபா மற்றும் காயாத நெல் 115 ரூபா என்ற விலைக்கு கொள்வனவு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”
இதனடிப்படையில், எதிர்வரும் பொங்கல் தினத்திற்குப் பிறகு, வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம் நெல்லை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நெல்லை வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்க விரும்பினால், ஓமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம், கல்நாட்டியகுளம், ஈச்சங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள சங்கத்தின் களஞ்சியசாலைகளில் நெல்லை ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், வவுனியாவில் சங்கத்திற்கு உரிய கட்டிடங்களிலும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால், சுமார் 2,700 மெட்ரிக்தொன்னுக்கும் அதிகமான நெல்லை இம்முறை கொள்வனவு செய்யப்படவுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.