ஒரு பயமிருந்தது!
மழை என்கிறார்கள்! புயல் என்கிறார்கள்!
வெள்ளம் என்கிறார்கள்! பேரிடர் என்கிறார்கள்!
ஏதாவது ஒரு காரணம் குறுக்கிட, “மக்கள்” திரளத் தவறினால்..! தெற்கல்லவா சிரிக்கும்!
தமிழர்கள் புலிகளைக் கைவிட்டுத் தம்மோடு கைகோர்த்துவிட்டார்கள் என்றல்லவா குறிக்கும். ஆனால் அந்தப் பயத்தை மீறியதொரு பெரு நம்பிக்கையிருந்தது. மழையில்லாத மாவீரர் தினம் எது? தம் ஆன்மாவோடு இயற்கையைப் பிணைத்து வைத்திருந்த வீரமறவர்களுக்கு இந்த நன்றிக்கடனையாவது செய்யாவிட்டால் பிறகென்ன அது இயற்கை..! இயற்கையை இறுக பிடித்தபடி கோப்பாய் துயிலுமில்லத்துக்குப் பயணமானேன்.

வழியெங்கும் தூறிய மழையால் “அழுக்காக்கப்பட்டிருந்த அவர்களின் தேசம் அப்போதுதான் சுத்தம் செய்யப்பட்டிருப்பதாயுணர்ந்தேன்”. புதிதாய் விரிந்திருந்தது கோப்பாய் தெருக்குடைகள், மழைக்கவசங்கள் சகிதம் “பூவும் பிஞ்சுமாக” அத்தெருவை நிறைத்த மக்கள் நடந்துகொண்டிருந்தது.

சிவப்பு மஞ்சள் ஒளிகளைக் கொண்ட மின்விளக்குகள் நேர்கோட்டைக் கீறிக்கொண்டிருந்தது, மெல்லிய மழை.
அவ்வர்ண நேர்கோடு இத்தேசத்தின் புதல்வர்கள் இறுதிவரை வரித்துக்கொண்ட அவர்தம் கொள்கையைப் போன்றிருந்தது. அந்தக் கருநீல வானத்தில் அவ்வளவு சீர். அவ்வளவு அழகு..!
தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு வெளியே கழற்றிவிடப்பட்டிருந்த காலணிகள் அந்த வளாகத்துக்குள் கூடியிருந்த பெருஞ்சனத்தின் திரளைக் காட்டியது.

இன்று நான் ஏற்றித் தொழுவதற்கு ஒரு தீபம் கிடைக்க வாய்ப்பில்லையோ என்கிற கேள்வியெழ துயிலுமில்ல வளாகத்தினுள் நுழைந்தேன். அந்த வளாகத்தினுள் மக்கள் நடந்த சகதித் தடம், குடும்பிமலையிலிருந்து மணலாறு வரை தேசத்தின் புதல்வர்கள் நடந்தபோது உண்டான தடங்களை விட அதிகமாகவிருந்தது.
“மெதுவாக உங்கள் தடத்தைப் பதியுங்கள்” எனச் சொல்லுமாற்போல சேறும் சகதியும் கால்களை இழுத்துப் பிடித்தன.
எங்கேயும் ஏற்றுவதற்கு ஒரு தீபம் இருக்கவில்லை. அவர் நினைவாக எடுத்துவருவதற்கு ஒரு தென்னங்கன்று இருக்கவில்லை. ஒவ்வொரு தீபத்தையும் இவ்விருவருக்கு மேற்பட்டவர்கள் காத்துநின்றனர்.
எதிர்பார்த்தைவிட மும்மடங்காக அதிகரித்திருந்த மக்கள் தீபங்களைத் தேடியலைந்து, அவ்வளாகத்தின்
ஓர் மூலையில் தரித்து நின்று, தம் தவப்புதல்வர்களுக்கு வணக்கம் செய்ய ஓரிடம் கிடைத்தாலே போதுமென்ற முடிவுக்கு வந்திருந்தது.

மழையிருள் வேகமாக கவிழத்தொடங்கியது. தீபமேற்றும் நேரம் நெருங்க மணி ஒலித்தது.
இறுதி மணியோசை ஒலி அகல
மழை நின்றது.
“இயற்கை அந்நேரத்தில் தன் ஆச்சரியத்தை நிகழ்த்தியது.” தன் நன்றிக்கடனை இம்முறையும் மறவாது செலுத்தியது. பொதுத்தீபத்தை இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஏற்ற, அவ்வெளியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து தீபங்களும் உயிர்பெற்றன. மழையீரத்தின் நடுவிலும் வீசியெறிந்தன. சரியாக ஆறு நிமிடங்களுக்கு நின்றிருந்த மழை!

மீண்டும் பொழிய “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழே உறுதி” இசைக்கத் தொடங்கியது.
அவர் நினைவில் மனங்கள் விம்மி வீறிட மழையும் அழுது தீர்த்தது. தம் தலைகள் நனையக்கூடாதென்பதற்காக குடைகளைக் கொண்டுவந்திருந்த மக்கள், வீரப் புதல்வர்கள் நினைவாக ஏற்றப்பட்ட தீபங்கள் அணையக்கூடாதென்ற முடிவுக்கு வந்தது. கொட்டும் மழைக்கு நடுவிலும் ஒளிர்ந்த தீபங்களைப்
பல்வர்ணக் குடைகள் காத்தன.
மாவீரர் பண் முடிந்த பின்னும் மக்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்துபோக மனமின்றி தரித்துநின்றது.
மழையோ சிவப்பு மஞ்சள் ஆகிய தமிழ் தேசிய எழுச்சியின் வர்ணங்களை வானில் கோலமிட்டுக்கொண்டிருந்தது. அப்படியே நின்ற மக்கள் பொதுத்தூபிக்கு மலர் வணக்கம் செய்ய வரிசையாக நகர்ந்தது.

பொன் மாஸ்ரர் என அறியப்பட்ட அந்த முன்னாள் போராளி தன் கைநிரம்ப மலர்களை அள்ளிக்கொடுக்க, அதனை கனதியோடு வாங்கிய மக்கள், பொதுத் தூபியில் வைத்து, வானத்தைப் பார்த்து வணங்கினர்,
வானம் முழுவதும் மழையிருள் போர்த்தியிருந்தது. மலர்வணக்கத்தை நிறைவுசெய்துகொண்டு வெளியே வந்தால், அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் மாவீரர்களின் பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மாவீரர்களைத் தந்தவர்கள் தம் பிள்ளைகளின் பெயர்களும் அதில் உள்ளதா என்பதைத் தம் கைவிரலை வைத்துத் தேடிக்கொண்டிருந்தனர். அதில் பெயரைக் கண்டுபிடித்தவர்களின் கண்களிலிருந்து கசிந்த “கண்ணீர்” மழையைப் பொய்ப்பித்தது. துயிலுமில்ல வளாகத்திற்கு வெளியே வந்து காலணிகளைக் கொழுவிக்கொண்டு அந்த இருள்வெளித் தெருவில் நடக்கத் தொடங்கினேன். என்னைப்போலவே வந்த மக்களும் தனியாகவும், கூட்டமாகவும் நடந்துகொண்டிருந்தனர். மழை மறுபடியும் வேகமெடுக்க
நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தேன், சிவப்பும், மஞ்சளும் கலந்த மாவீர வெளிச்சம் மறைந்துகொண்டிருந்தது.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் 2024. மக்கள்