மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச பகுதியில் அமைந்துள்ள அம்மந்தனாவெளி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட சம்பக்களப்பை மற்றும் தேக்கஞ்சேனை கிராமங்களானது வாகரை அம்மந்தனாவெளி ஆற்றிற்கு அக்கரையில் அமைந்துள்ள கிராமங்களாகும்.
இக் கிராமங்கள் இரண்டிலும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்வாதார தேவையை கருத்திற்கொண்டு மீன்பிடி,தேன் எடுத்தல் மற்றும் மேட்டுநிலப்பயிர் செய்தல் போன்ற தொழில்களை தமது வாழ்வாதாரத்திற்கான தொழிலாக செய்து வருகின்றனர். சுமார் பதிணைந்து வருடங்களுக்கு மேலாக தாம் இப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு அரசின் மூலமாகமோ அல்லது ஏனைய தரப்பினர்கள் மூலமோ எவ்வித உதவிகளும் இதுவரை செய்யப்படவில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவை தொடர்பாக ஆராய்து பார்த்து கண்டறியப்பட்ட உண்மையின் நிமித்தம் ஒருசில உதவிகளை கடந்த இரண்டு வருட காலமாக எம்மால் முடிந்தளவில் செய்து வருகின்றோம்.
ஆனாலும் இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நேரடியாக நாம் வினாவியபோது, அவர்களது பதிவுகள் பால்ச்சேனை வாகரை எனும் கிராமத்தில் உள்ள படியினாலும் அவர்கள் அத்துமீறி அரச காணிகளில் குடியிருப்பதனாலும் அவர்களுக்கு உதவுவதற்கு உத்தியோக பூர்வமாக அனுமதி எதுவும் தம்மால் தரமுடியாது என சம்மந்தப்ட்ட அதிகாரி கையை விரித்துள்ளார்.

இதன் காரணத்தினால் அம்மக்களுக்கு ஒரு நிறுவனத்தினரால் கட்டிக் கொடுக்கப்பட இருந்த கிணறுகள் மற்றும் பல உதவிகள் செய்துகொடுக்க முடியாமல் அந்த நிறுவனம் திரும்பிச்சென்றுள்ளது.
இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரியின் கருத்தினை அம்மக்களிடம் வினாவியபோது அம் மக்கள் தெரிவிக்கையில் தமக்கான தொழில் இருக்குமிடத்தில் தான் தம்மால் வாழமுடியுமென்றும் அத்துடன் பால்சேனையில் இருக்கும் வீட்டிலும் காணியிலும் தமது பிள்ளைகள் திருமணம் முடித்து தமது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் .தமக்கு இருப்பிடத்திற்கு வீடோ காணியோ இல்லாததன் காரணத்தினால் தான் தாங்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்களது இருப்பிடத்திற்கு செல்வதற்கு வீதி இல்லை அத்துடன் அடிப்படை தேவையான மின்சாரம், மலசல கூடம், வீடு, வைத்திய வசதி, பள்ளிக்கூடம் எதுவுமே அற்ற நிலையில் தினமும் யானைத் தொல்லை மற்றும் உணவு பற்றாக்குறை போசணைக் குறைபாடுகளுடனும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இவர்கள் வசிக்கும் தற்காலிக கொட்டகைகள் கிடுகு மற்றும் இலுக்கு புல்லு போன்றவற்றால் கூரைமேயப்பட்டுள்ள நிலையில் சேதமுற்றுள்ள கூரையினூடாக ஒழுகும் மழை நீரிலிருந்து தம்மை பாதுகாப்பதற்கு ஒழுக்கிற்கு பழைய பாத்திரங்கள் வைத்திருந்தனர். குடை இருந்த ஒருசிலர் கொட்டிலுக்குள் குடையை விரித்து பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 26,27,28.11.2024 அன்றைய நாட்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினாலும் மேற்படி கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்கள் தற்காலிகமாக போக்குவரத்து செய்து வந்த காட்டுப்பாதையும் தடைபட்டு நீரினால் சூழப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களை பார்வையிடுவதற்காக சென்ற 30.11.2024 நாளான்று கடும் பிரயச்சித்தங்களுக்கு மத்தியில் வாகரை கண்டலடி ஆற்றங்கரையிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மணிநேர படகு பயணத்தின் பின்னர் எம்மால் அந்த கிராமங்களுக்கு செல்லக்கூடியதாக இருந்தது. வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்த இந்த மக்களுக்கு முடிந்த சிறு அளவிலான ஒரு வாரகாலத்திற்கு தேவையான உலருணவுகளை எம்மால் வழங்க கூடியதாக இருந்தது.
எனவே இவ்விடங்களை எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கவணத்தில் எடுத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தொடர்புகளுக்கு
ச.சிவயோகநாதன்
சிவில் சமூக செயற்பாட்டாளர்
மட்டக்களப்பு.
0779060474.