மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகள் கட்டாயம் வழங்கப்படும் என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்று (11) ஹட்டனில் 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து உரையாற்றிய அவர், இது தொடர்பாக முக்கியமான கருத்துகளை தெரிவித்தார்.
கலைச்செல்வி கூறியதாவது:
“காணி உரிமை என்பது எமக்குரிய சொத்து. எனவே, இந்த உரிமையை பாதுகாப்பதற்கும் அதை வைத்திருக்க முடியாத சூழ்நிலையிலிருந்து மலையக மக்களுக்கு வீட்டு உரிமை, காணி உரிமை பெறுவது 200 வருடங்களாக கனவாக இருந்துள்ளது” என்றார்.
மேலும், “இந்த பிரச்சினையை தீர்க்க எமது ஆட்சியில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 545 குடும்பங்களுக்கு காணி உரிமை வழங்கும் பணி ஆரம்பித்துள்ளோம். இது ஒரு பொறுப்பான பணியாகும். எமது மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்,” எனவும் அவர் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பற்றி:
“காலை முதல் மாலை வரை வேலை செய்தாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறு சம்பளத்தையே பெற்று வருகின்றனர். அந்த சம்பளம் கொண்டு அவர்களின் அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை” என்றார்.
“இந்த சூழ்நிலையை மாற்றவும், வரவு செலவுத் திட்டத்தில் ஒரு வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், மலையக மக்களுக்கு நிலப்பிரச்சினைகள் மற்றும் வீட்டு உரிமைகள் தொடர்பில் நிலவிய நீண்டகாலக் கடுமையான நிலையை மாற்ற அரசாங்கம் எடுக்கின்ற கட்டாய நடவடிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.