மலையக மக்களின் உரிமைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் மலையக தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை (10) சிறப்பாக நடைபெற்றது.
பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலையக மக்களின் தொழில்சார் உரிமைகள், காணி உரிமை, மொழி உரிமை, அரசியல் உரிமை, பொருளாதார உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த வீரர்களின் நினைவுகள் போற்றப்பட்டன. குறிப்பாக, தலவாக்கலை, டெவோன் தோட்டத்தில் காணி உரிமைக்காக போராடி உயிர் நீத்த சிவனு லெட்சுமனன் உள்ளிட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
“இவர்களின் தியாகம் இன்றும் நம்மை ஊக்கப்படுத்துகிறது. அவர்களின் கனவு நனவாகும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு செயற்பாட்டாளர் உணர்வுபூர்வமாக கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் முன்னோடி போராட்ட வீரர் முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கான தீர்மானம் 2019 இல் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
