கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து அந்தப் பாதையூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் பருவப்பெயர்ச்சி மழை மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடும்பிமலை, புலிபாய்ந்த கல் திகிலிவெட்டை, கோராவெளி, பெண்டுகள் சேனை, சாராவெளி, முறுத்தானை போன்ற கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமசேவகர் பிரிவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் சுமார் 300 மீட்டர் தூரம் வரை வெள்ள நீரோட்டம் ஊடாக மக்கள் நடந்து சென்று தங்களின் பொருட்களை சுமந்து, படகு சேவையை பயன்படுத்தி அப்பாலுள்ள படகு சேவை இடத்திற்கு சென்று தங்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரான் பிரதேச செயலகம் இந்த படகு சேவையை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல், சந்திவெளி துறை ஊடான போக்குவரத்திற்கான படகு சேவையை கோறளைப்பற்று பிரதேச சபை வழங்கி வருகின்றது.
பாதை தற்போது பழுதடைந்துள்ளதால், மக்கள் படகு சேவையை பயன்படுத்துவதில் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், பிரதேச மக்கள் இந்த படகு சேவையை பயன்படுத்துவதில் கவலை தெரிவித்துள்ளனர்.
புலிபாய்ந்த கல் பிரதான வீதியின் பாலத்தினை அபிவிருத்தி செய்தால், வெள்ளக்காலங்களில் போக்குவரத்தை மேற்கொள்வது எளிதாக அமையும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் சில குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றை அண்டிய பிரதேசங்களில் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள், கடல், ஆறு மற்றும் குளங்களில் நீராடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.