வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழை காரணமாக செட்டிக்குளம், ஆண்டியாபுளியங்குளம் மற்றும் ராமையன்குளம் பகுதிகளில் சுமார் 40 ஏக்கர் வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கி முற்றாக அழிந்துள்ளன.
குறிப்பாக, வவுனியா – பாவற்குளம் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குக் கீழுள்ள வயல் நிலங்களே மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளன.
மேலும், விவசாயிகளின் வேளாண்மை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நெற்பயிர்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வெள்ள நீர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பயிர்களுக்கு மேலாக மூடி பாய்ந்து வருவதால், விவசாயிகள் தமது முழு விவசாயத்தை இழந்து, தங்கள் வாழ்வாதாரம் குறித்து கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.