கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) திடீரென எக்ஸ்ரே பிரிவில் தீ பரவியபோது, தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட தீயணைப்புக் கருவிகள் இயங்கவில்லை.
இதன் பின்னர், நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன், வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட விசேட பெண்கள் மருத்துவமனை கட்டடத்தில் உள்ள தீயணைப்புக் கருவிகளை கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.
காலாவதியான கருவிகள் இயங்காத காரணத்தால், தீயை அணைக்கும் முயற்சிகள் தாமதமானதை அடுத்து மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் உள்ள அனைத்து தீயணைப்புக் கருவிகளும் பல வருடங்களாக காலாவதியாகி, அவை இதுவரை திருத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. இது அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அருகிலுள்ள புதிய கட்டடத்தில் தீயணைப்புக் கருவிகள் இல்லாமற்போயிருந்தால், வைத்தியசாலையில் பரவிய தீயை அணைக்க வழியின்றி தீ மேலும் பரவி மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் பொதுமக்கள் அதிருத்தியாகி உள்ளனர்.
தீ விபத்தின்போது, தீயை உடனடியாக அணைக்கும் கருவிகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது காலாவதியான இந்த கருவிகள் கவனிக்கப்படாமலே இருந்துள்ளமை, பொறுப்புமிக்க தரப்பினரின் தவறாகும். இதை உடனடியாகத் திருத்தி, செயற்படவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.