காணிகளுக்கான தமிழர்களின் உரிமை போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என தென்னிலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன், கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், இந்த போராட்டத்தை இனவாதமாக ஆர்த்தப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “தேசிய மக்கள் சக்தி அரசு உட்பட பல அரசாங்கங்கள் எங்கள் நிலங்களை எங்களிடம் தருவதாக உறுதியளித்தன. ஆனால் இதுபற்றி எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இலங்கையின் அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது” என்றார்.
இந்த நிலங்கள் தங்கள் மூதாதையர்களின் சொத்துகள் என்றும், அங்குள்ள பௌத்த ஆலயத்தின் மதகுருவும் இந்த நிலத்தை தங்களுடைய சொத்தாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், அவர் இதனை பொதுவாக தெரிவிக்க தயங்கியுள்ளார்.
“எங்கள் போராட்டம் சிங்கள மக்களுக்கோ அல்லது பௌத்த மதத்திற்கோ எதிரானது அல்ல. எங்கள் நிலங்களை மீட்டெடுக்க மட்டும் நாம் போராடுகின்றோம்” எனவும் அவர் கூறினார்.
“உரிமைகளுக்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்த வேண்டாம்” என அவர் தென்னிலங்கை மக்களிடம் வலியுறுத்தினார்.