2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக விவசாயங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு, மொத்தம் 1,484 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், சோயா உள்ளிட்ட பயிர்ச் செய்கைகள் 87,690 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்ட 74,958 விவசாயிகளுக்கு, இலவச காப்புறுதி திட்டத்தின் கீழ் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் காட்டு யானைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு இந்த நட்டஈடு வழங்கப்பட்டதாகவும், ஒரு ஏக்கர் நிலத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர்ச்செய்கையில் தொடர்ந்து ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில், இந்த காப்புறுதி திட்டம் முழுமையாக இலவசமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.
