யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை உருவானது.

இந்தச் சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பொலிஸாரால் கீழே தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரைக்காக அத்துமீறி கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்திற்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்த போதிலும், பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில் பதற்றம் தொடர்ந்தும் நிலவி வருகிறது.

