சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்பினரும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.02.26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இந்த அழைப்பை விடுத்தனர்.
இதனுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
சுதந்திர தினம் ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலை அல்ல, மாறாக தொடரும் அநீதி மற்றும் வலியின் நினைவாகவே அமைகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
