‘பொங்கும் மங்கலம்’ எங்கும் நிறைவாக சாதி, இன, மத எல்லைகளைக் கடந்து, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகைதான் பொங்கல்.
மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் வைப்பதும், கரும்பு உண்டு மகிழ்வுடன் கொண்டாடுவதும் தைப்பொங்கலின் முக்கிய அம்சங்கள். தமிழ் மாதமான தை 1 அன்று சிறப்பாக நடைபெறும் இப்பெருவிழா, தமிழர் வாழ்வியல் பண்பாட்டின் முத்திரையாக அமைந்துள்ளது.
பொங்கலின் தோற்ற வரலாறு
ஜீவராசிகளின் வாழ்வியல் அடிப்படை சக்தி சூரிய பகவானின் அருள்பார்வையில்தான் உள்ளது. சூரியபகவானை வணங்கினால் மகிழ்ச்சியும், வளமும் நிரம்பிய வாழ்வை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் பொங்கல் பண்டிகை.
சாஸ்திரத்தின் படி, மழை, பனி, வெப்பம் இவையெல்லாம் சூரியனின் இயங்குதலால் ஏற்படுகிறது. ‘பொங்கல்’ என்பதற்கு “பொங்கி வழிதல்” அல்லது “பெருகுதல்” என்று பொருள். புத்தரிசியுடன் பாலை பொங்கி வழிக்கச் செய்து, தைமாதத்துக்கு வரவேற்பளிக்கின்றனர். இதன் மூலம் புத்தாண்டு முழுவதும் வளமும் மகிழ்ச்சியும் பொங்கி வழியட்டும் என்ற நம்பிக்கையுடன் தமிழர்கள் தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர்.
நன்றி செலுத்தும் நாள்
தைப்பொங்கல் என்பது இயற்கையையும், விவசாயத்தையும், மழையையும், கால்நடைகளையும் பெருமைப்படுத்தி நன்றி செலுத்தும் ஒரு நாள். அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை வீட்டிற்கு கொண்டு வந்து படைத்து வணங்குவது முக்கிய நிகழ்வாகும்.
இயற்கையின் அருளை உணர்ந்து, மழை, சூரியன் மற்றும் விவசாயத்துக்கு உழைத்த வேலைக்காரர்களுக்கு கௌரவம் தெரிவிக்கும் இப்பெருவிழா, தமிழர்களின் சமுதாய ஒற்றுமையின் சின்னமாகும்.
பொங்கல்படி
வீட்டின் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பொங்கல்படி வழங்கும் பழக்கமும் இதன் தனிச்சிறப்பு. உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று பாசத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் இன்னும் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
மறைந்துவரும் மரபுகள்
இன்றைய நகர வாழ்க்கை காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து வழிவந்த சில பாரம்பரிய கலாச்சாரங்கள் மறைந்துகொண்டிருக்கின்றன. தைப்பொங்கல் என்பது வெறும் விழா அல்ல; அது தமிழர் அடையாளம்.
பொங்கல் பண்டிகையின் மரபுகள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் இவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லுதல் நமது கடமையாகும். தமிழர் திருநாளின் முழுமையான அர்த்தத்தை இளம் தலைமுறைக்கு போதிக்க வேண்டியது மிக முக்கியம்.