இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படக்கூடிய பதற்ற சூழ்நிலைகளில், இலங்கை “அணிசேரா” நிலைப்பாட்டை கடைபிடிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் மோதல்களில் இலங்கை எந்தவொரு தரப்பையும் ஆதரிக்காது” என்று அவர் வலியுறுத்தினார்.
அணிசேரா கொள்கையில் உறுதி அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியதாவது
- எமது இறையாண்மை, பிரதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, அணிசேரா கொள்கையை நாங்கள் கடைப்பிடிப்போம்.
- இலங்கையின் நிலம், நீர்ப்பகுதிகள் அல்லது வான்வெளியை வேற்று நாடுகளுக்கெதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்.
- கடந்த காலங்களில் இந்தக் கொள்கையைத் தொடர்ந்து செயல்பட்டுள்ளோம். இனியும் இதில் எமக்கு உறுதி உள்ளது.”
பிராந்திய அமைதி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு
பிராந்தியத்தில் பதற்றங்களைக் குறைப்பதே இலங்கையின் முதன்மை நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்:
- பயங்கரவாதம் எந்த வடிவிலும் ஏற்கத்தக்கது அல்ல. அதை ஆதரிக்கவோ, அங்கீகரிக்கவோ இலங்கை தயாராக இல்லை.
- பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்கும்.