பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, “பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமூகத்தினர் கூட்டுப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. “பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” என்ற கோஷம், தற்போதுள்ள அடக்குமுறைச் சட்டத்தையும், முன்மொழியப்பட்ட புதிய சட்ட வரைவும் நிராகரிக்கும் உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கிறது.
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய சட்ட வரைவை முழுமையாக மீளப் பெற வேண்டும் என்பதுடன், கடுமையான ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (PTA) உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கையாகும்.
இன்று (19 பெப்ரவரி 2026) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள், பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் 12 அமர்வுகளாக கையெழுத்துச் சேகரிப்பு நடைபெறுகிறது. அதேபோல், பல்கலைக்கழகத்தின் முன்பாகவும் பொதுமக்களின் ஆதரவுடன் கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்விச் சமூகத்தின் இந்தத் தீவிர முயற்சி, அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக எழுந்துள்ள வலுவான ஜனநாயகக் குரலாகக் கருதப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இது ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

