பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்று வரும் 40 வயதுக்கு மேற்போட்டோர் அணிகளுக்கிடையிலான தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய விளையாட்டுக் கழகம் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வடமராட்சி சிரேஸ்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் அமரர் க.சொக்கன் (சசிகுமார்) அவர்களின் ஞாபகார்த்தமாக அபிராமி இரும்பகத்தின் அனுசரணையுடன் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்தும் தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி – 2026 கடந்த 10/06/2026 ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
குறித்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஏழாம் நாளான நேற்று (16) செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு ஐக்கிய விளையாட்டு கழகம் எதிர் உடுப்பிட்டி யூத் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஐக்கிய விளையாட்டு கழகம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் பாதி ஆட்ட நிறைவில் 3 : 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடிய ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு உடுப்பிட்டி யூத் அணி சவாலளிக்கும் வகையில் செயற்பட்டது.
ஆட்ட நேர முடிவில் 6 : 1 என்ற கணக்கில் ஐக்கிய விளையாட்டு கழக அணி வெற்றி கொண்டது. மூன்று லீக் ஆட்டங்களில் இரண்டு வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது ஐக்கிய விளையாட்டு கழகம்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு பலம்சேர்த்த ஐக்கிய விளையாட்டு கழக வீரர் மயூரன் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
