Friday, September 11

இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளைத் தேடி” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் நிலை தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்த போராட்டக்காரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்பதை வலியுறுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக தங்களது உறவுகளின் நிலை குறித்து பதிலுக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கான நீதியையும் உண்மையையும் உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கையை சர்வதேச மட்டத்தில் மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version