“இடர்களை இணைப்போம் கரங்களை” என்ற மகுடவாக்கியத்துடன் கல்விக்கான உதவியை நோக்கமாகக் கொண்டு 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Vengaram Foundation தனது கல்விசார் அறப்பணியில் பதினாறாவது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது.
கல்வி ஒளியை தேவையுடைய கிராமங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பெற்றோமாக்ஸ் விளக்கொளியில் தொடங்கிய இந்த செயற்பாடு பல சவால்களை கடந்து இன்று நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலும் விரிவடைந்துள்ளது. கல்விக்காக நிலத்திலும் புலம்பெயர் சமூகத்திலும் இருந்து உதவி செய்து வரும் கொடையாளர்களின் பங்களிப்பு காலத்தால் அழியாததாகும். தாயகத்தில் மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்குவதில் அவர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்துள்ளது.
அறக்கட்டளையின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொடையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஆயுள் ஆரோக்கியம், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி வேண்டி வெண் சுடரேற்றி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு N. Thanushkan தலைமையில் அறக்கட்டளையின் தலைமையகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் புலம்பெயர் செயற்பாட்டாளர் Shanmuga Bhaskaran, செயற்பாட்டாளரும் புவியியல் துறை உதவி விரிவுரையாளருமான Priyadharshini Pradeepan, சிங்கள மொழி கற்கைநெறி ஆசான் Prem, பயிலுநர் சட்டத்தரணியும் மாணவர் அணிச் செயற்பாட்டாளருமான T. Nilakshan உள்ளிட்ட பல செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கற்கைநெறி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், அறக்கட்டளையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்களுக்கான இலவச ஆங்கிலப் பாட கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதுடன், “உலகின் மிகச் சிறந்த ஆயுதம் கல்வி” என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கு எழுதுகருவிகளும் வழங்கப்பட்டன.
கல்வி மூலம் சமூக முன்னேற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வரும் வெண்கரம் குழுமம், எதிர்காலத்திலும் கல்விசார் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

