தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய விதிமுறைகளால் இலங்கை முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, மருந்தகங்களில் தகுதிவாய்ந்த மருந்தாளர் ஒருவர் முழுநேரமாக பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள மருந்தாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இந்த விதிமுறை அமலுக்கு வந்தால் பெரும்பாலான மருந்தகங்கள் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சங்கத்தின் தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால், குறிப்பாக கிராமப்புற மக்கள் மருத்துவ வசதிகளை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவதால், மக்கள் மருந்துகளைப் பெற பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இலங்கை மருத்துவக் கவுன்சிலின் தர நிர்ணயங்களுக்கு ஏற்ப தகுதிவாய்ந்த மருந்தாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அரசாங்கத்தின் பரீட்சையில் வெற்றி பெறும்வர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மருந்தாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதே தங்களது கோரிக்கை என்று சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், அனைத்து மருந்தகங்களிலும் தகுதிவாய்ந்த மருந்தாளரை நியமிப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய விதிமுறைகள் இலங்கையின் மருத்துவத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், மக்களின் மருத்துவ தேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அரசாங்கம் இந்த பிரச்சினையை உடனடியாக கையிலெடுத்து, தகுந்த தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.