யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக, சுயாதீன சர்வதேச கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அதற்கு இந்தியா சர்வதேச அளவில் பரப்புரை செய்ய வேண்டும் எனவும் இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் உரையாற்ற அனுமதி கோரித் சபைச் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவரது கடிதத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கூறுகள் பின்வருமாறு:
“ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த விவகாரத்தை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப அனுமதி கோருகிறேன். எனக்கு உரையாற்ற அனுமதியளிக்கப்படின், பின்வரும் விவகாரங்களை முன்வைக்கவுள்ளேன்:
- யாழ்ப்பாணம், செம்மணியில் சமீபத்தில் மனித எச்சங்களுடன் கூடிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை, தமிழ்நாட்டு மக்களின் வேதனையை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன.
- மீட்கப்பட்ட எச்சங்கள், போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உடல் ஒத்தடங்கள் எனக் கருதப்படுகின்றன.
- இலங்கைத் தமிழர்கள் பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட வன்முறை, பாலியலியல் வன்முறை, காணாமற்போனவர்கள் போன்ற மனித உரிமை மீறல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.
- இது வெறும் தடயவியல் புதைகுழி அல்ல – இது மறைக்கப்பட்ட வரலாறும், தாமதிக்கப்படும் நீதியின் சின்னமும் ஆகும்.
தமிழகம், ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி மற்றும் வரலாற்று உறவுகளை பகிர்ந்து கொண்டிருப்பதால், இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருக்க முடியாது.
எனவே, இந்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தை ராஜதந்திர ரீதியில் எடுத்துரைக்க வேண்டும். இலங்கை அரசிடம் முழுமையான வெளிப்படையான விசாரணையை வலியுறுத்த வேண்டும்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பாக, சுயாதீன சர்வதேச கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு இந்தியா சர்வதேச அளவில் பரப்புரை செய்யவேண்டும்.
மேலும், நீதி, நல்லிணக்கம் மற்றும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
இந்தியா, வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து பேசுவதில் மட்டுப்படக் கூடாது. எல்லைகள் கடந்த தமிழ் மக்களின் கௌரவத்திற்கும், உண்மையும் நீதிக்கும் குரல் கொடுக்க வேண்டும்.”
இந்த வலியுறுத்தல், செம்மணி மனித புதைகுழியைப் புறக்கணிக்க முடியாத முக்கியமான மனித உரிமை விவகாரமாக இந்திய அரசியல் மேடைகளிலும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.
