Monday, January 26

தமிழர் தாயகத்தில் போரால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் (Resettlement) மற்றும் போரால் சிதைந்த பகுதிகளின் மீள் நிர்மாணம் (Reconstruction) ஆகியவை அவசரகால அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

1983-இல் தொடங்கிய உள்நாட்டுப் போரின் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்களின் அவல வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவது நோக்கில், கடந்த ஒரு தசாப்தமாகவே பேரவை இந்தியாவுடனும், மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவளிக்கும் மேற்குலக நாடுகளுடனும் இடைவிடாது தொடர்பு கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை இலங்கை அரசுகள் அனைத்தும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்தைப் புறக்கணித்து மட்டுமல்லாமல் பல தடைகளையும் ஏற்படுத்தி வந்ததாக பேரவை குற்றம்சாட்டியுள்ளது. “அரசியல் தீர்வு வரும் வரை காத்திருப்போம்” எனச் சொல்லி மக்களின் நீண்டகால பிரச்சினையைத் தள்ளிப்போடுவது பொறுப்பற்ற செயலாகும் எனவும் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

பேரவையின் வலியுறுத்தலின்படி, இந்தோ-லங்கா உடன்படிக்கையின் ஒரு முக்கிய அங்கமாக மீள் குடியேற்றம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த சிங்கள அரசுகள் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளன. இதன் மூலம் தமிழர் தாயகத்தில் தமிழர்கள் “எண்ணிக்கை சிறுபான்மை” (Numerical Minority) ஆகச் சுருங்கச் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது எனவும் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில், “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை அன்புடன் பொறுப்பேற்கத் தயாராக உள்ளோம். அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்” என தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழர் தாயகத்தின் ஜனநாயக பிரதிநிதிகள், சிவில் சமூகம், புலமையாளர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து, ஒருங்கிணைந்த முன்மொழிவுகளை முன்வைத்து நடைமுறைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட வேண்டும் என பேரவை வலியுறுத்தியுள்ளது.

“முக்கியத்துவம் வாய்ந்த இந்த மனிதாபிமான பணிகளை அவசர அடிப்படையில் நடைமுறைப்படுத்த, உண்மையான அக்கறை கொண்ட தமிழ் சமூகத்தினருடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். மீள் குடியேற்றம் மற்றும் மீள் நிர்மாணம் குறித்த கேள்விகளில் அரசியல் மற்றும் குடிசார் அமைப்புகள் உடனடியாகச் செயல்பட்டு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version