பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) வருடாந்த தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15, 2025 அன்று மாலை 6:30 மணிக்கு, வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் மிக சிறப்பான முறையில் நடத்த இருக்கின்றது. இந்த நிகழ்வு தமிழர் கலாச்சாரத்தை, மரபுகளை, மற்றும் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அமைச்சர்கள், கவுன்சிலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் முக்கிய விருந்தினர்களை ஒருங்கிணைத்து நடைபெறவுள்ளதாக அவர்களது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
மேலும் அவர்களது முகப்புத்தகத்தில்
பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த சிறப்பான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிகழ்வானது, பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசாங்க அமைச்சர்கள், கவுன்சிலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களென பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு பேச்சுக்கள், இசை, நடனம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் தமிழர் மரபுகளையும் தை பொங்கல் நிகழ்வினையும் சிறப்பிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை 2011ஆம் ஆண்டிலிருந்து தமிழர் பாரம்பரிய செழுமையினை தை பொங்கல் நிகழ்வினூடாக பிரித்தானிய மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முன்னெடுத்த முயற்சி இன்று மிக பெரும் விருட்சமாக வளர்ச்சி பெற்று வருகின்றது.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழுவின் (APPG T) செயலகமாக பி,த.பே. (BTF) முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டின் தமிழர் மரபு திங்கள் மற்றும் தைத் திருநாள் நிகழ்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2007ஆம் ஆண்டு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவினை உருவாக்குவதில் பி,த.பே. (BTF) முக்கிய பங்காற்றியமையும் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான சமாதானம், நீதி மற்றும் சமூக, அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் அதன் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.
APPG T ஆனது ஷிவோன் மெக்டோனாவை (Siobhain McDonagh MP, Labour, Mitcham & Morden), தலைவராகவும் மற்றும் உமா குமரன் MP (Labour, Stratford & Bow ), பொபி டீன் (Bobby Dean MP, Liberal Democrats, Carshalton & Wallington) பெரோனஸ் வர்மா (Baroness Verma, Leicester representing the Conservative party) ஆகியோரை துணைத் தலைவர்களாகவும் கொண்டு செயல்படுகின்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மகளிர் அணியின் தேசியரீதியான தலைவரும், கோவை தெற்கு தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
பிரித்தானியா தமிழர் பேரவையினர் இவ் விழாவை மேலும் சிறப்பிக்க, சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவத்திற்குரிய திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களையும், கௌரவத்திற்குரிய திருமதி வானதி சிறிநிவாசன் அவர்களையும் அழைக்க ஏற்பாடு செய்திருந்தனர். திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுடைய நெருக்கடி மிக்க பொதுப் பணிகளுக்கிடையே பொங்கல் விழாவில் கலந்து கொள்ள முடியாத போதிலும், அவர்கள் இவ் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டமை தனிச் சிறப்புடையது. திருமதி வானதி சிறிநிவாசன் அவர்களும் அதிகரித்த வேலை பழுவின் மத்தியில் பொதுப் பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும் அவர்களால் இந் நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்ததை பி.த.பே. (BTF) வரவேற்கின்றது.
திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாளராக இருந்து வருகிறார். மேலும் தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கிடையேயான வலுவான இணைப்புத் திட்டங்களை (Infrastructure) முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பிரித்தானியா தமிழர் பேரவை கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய இலங்கை “ஆகாய”, “கடல்” மற்றும் “நில” வழியிலானஇணைப்புத் திட்டங்களுக்காக தொடர் நடவடிக்கைகளை இடையறாது மேற்கொண்டு வருகின்றது. வான் மற்றும் கடல் இணைப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள மக்களுக்கு கணிசமான நன்மைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொதிகளை வழங்குவதன் மூலம் திருமதி வானதி சிறிநிவாசன் அவர்கள், இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டுள்ள கரிசனையை வெளிக்காட்டி வருகிறார். அவரது தன்னலமற்ற சேவையால் உலகளாவிய தமிழர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகிறார்.
தை பொங்கல் பண்டிகையானது இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். தமிழர்கள் காலங்காலமாக, பாரம்பரியமாக நித்திய சக்தி வழங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தங்கள் உழைப்பின் பலனை அனுபவித்து கொண்டாடுகிறார்கள்.
இந்த வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்ற நிகழ்வு, பாராளுமன்றத்திற்குள் நடக்கும் தனிச் சிறப்பு மிக்க தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் நிகழ்வாகும். மேலும் இந் நிகழ்வானது பிரித்தானிய அரசியல் வெளிகளில் தமிழர் பாரம்பரியத்திற்கு அதிகரித்து வரும் அங்கீகாரத்தைக் குறித்து நிற்கின்றது.
இந்த முக்கியமான கலாச்சார நிகழ்வுக்கு மரியாதைக்குரிய அனைத்து சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்க BTF காத்திருக்கிறது. இம் முக்கித்துவம் வாய்ந்த நிகழ்வில் பாராளுமன்ற வரையறைக்குட்பட்டு ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதால் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக பிரித்தானியா தமிழர் பேரவையினால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களால் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தமிழர் பேரவை,