முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் உள்ள தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணி தனியார் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், இக்காணியை மீட்டுத் தரக் கோரி இன்று (27) காலை பூதன்வயல் பகுதியில் உள்ள ஊர்மக்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பாடசாலையில் தற்போது 53 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆனால், மாணவர்கள் படிக்கும் இடம் தற்போது பூதன் வயல் பொதுநோக்கு மண்டபத்தில் மரங்களின் கீழ், வசதிகள் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது.
பாடசாலை, யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் நடைபெறும் முன்பு, பல ஆண்டுகளாக அந்த காணியில் இயங்கிவந்தது. ஆனால், யுத்தம் முடிந்த பின்னர், ஒருவர் அந்த காணியை சுபீகரித்து, பாடசாலையின் அடையாளங்களை அழித்து ஒரு வீடு கட்டியுள்ளார்.
அப்போதைய அரசியல் சூழ்நிலையால், இந்த காணியை மீட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி, அவர்கள் ஊடாக தனியாரை வெளியேற்ற முயற்சி செய்தபோதும், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இன்றைய தினம், பொதுவாக பாடசாலையின் காணிக்கு அருகாமையில், ஊர்மக்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை குரல்”, “சட்டம் எம்மை கைவிட்டுவிட்டதா?”, “கல்வி என்பது சம உரிமை. அது எமக்கு மட்டும் கிடைக்காதது ஏன்?”, “திறமை உள்ள எமது கல்வியை தட்டிப்பறிக்காதீர்கள்!” போன்ற பல்வேறு வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சர்மி, பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் வில்வராசா, கிராம சேவையாளர் மற்றும் முள்ளியவளை பொலிஸாருடன் இணைந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர். அவர்கள், குறித்த பிரச்சினைக்கான தீர்வை விரைவில் வழங்குவதாகவும், தற்காலிகமாக பாடசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கைகளை அடங்கிய மகஜரைக் கையளித்தனர். மேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி கிளிநொச்சி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெறுவதாகவும், காணி தொடர்பான சாதகமான பதிலை பெறாவிட்டால், கல்வி செயல்பாடுகளை நிறுத்தி, போராட்டத்தை மீண்டும் தொடர்வதன் மூலம் தீர்வு கிடைக்கும் வரை போராடுவதாகவும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக நிறைவுபெற்றது.