கொக்குத்தொடுவாய் – கூமடுகண்டல் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்கள், மகாவலி அதிகாரசபையினால் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகக் கூறி தமிழ்மக்கள் மேற்கொண்டுள்ள நெற்செய்கையை ஊடறுத்து யானைவேலி அமைக்கும் நடவடிக்கையில் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டு வருவதாகவும் கொக்குத்தொடுவாய் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டனர். குறிப்பாக, தமிழ்மக்கள் நெற்செய்கை செய்துள்ள தமது பூர்வீக விவசாயக் காணிகளை மேலும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே, மகாவலி அதிகாரசபை இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
விவசாயிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாக கொக்குத்தொடுவாய் பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன், விவசாயிகள் மற்றும் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்களிடமிருந்து தகவல்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும் திணைக்களங்களுக்கும் அறிவித்து, மகாவலி அதிகாரசபையின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.
