Monday, January 26

மன்னார்த் தீவிற்குள் காற்றாலை மின்உற்பத்தித் திட்டத்தை முன்னெடுத்தால் தீவின் நிலைமை மோசமாகப் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுவதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இன்று (07.08.2025) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மன்னார்த் தீவு காற்றாலை மின்னுற்பத்தித் திட்டப் பிரச்சினை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், மக்கள் ஏற்காத இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:

  • மன்னார் மக்களுக்கும், அப்பகுதியின் பொதுஅமைப்புகளுக்கும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தின் மீது எந்தவித எதிர்ப்பும் இல்லை.
  • ஆனால், மன்னார்த் தீவில் கோபுரங்கள் அமைக்கப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் மற்றும் பொதுஅமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
  • “பாதிப்புகள் ஏற்படாது” என்ற அடிப்படையில் கடந்தகால அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தாலும், மக்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை.
  • யுத்தகாலத்தில் “பாதுகாப்பு வலயம்” என அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்த மக்களை அரசுப் படைகள் தாக்கி பல உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள், அரசின் வாக்குறுதிகளில் மக்களின் நம்பிக்கையை குலைத்துள்ளன.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மன்னார்த் தீவிற்குக் கொண்டு வரப்பட்ட காற்றாலை கோபுரப் பாகங்களை, தள்ளாடி பகுதியில் மக்கள் வழிமறித்திருந்தாலும், அவை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மக்களின் எதிர்ப்பை மீறி தீவிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அவர் கண்டித்தார்.

“அரசு என்பது மக்களின் விருப்பத்தை மதிக்கவேண்டுமே அன்றி, மக்கள் விரும்பாத ஒன்றை அத்துமீறித் திணிக்கக் கூடாது. எனவே, மக்கள் ஏற்றுக்கொள்ளாத இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version