Monday, January 26

முத்தையன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை மூலம், இராணுவத்தினரின் அராஜகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயல்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாணம்–அராலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் கூறியதாவது:

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. யுத்தக் காலத்தில் எவ்வாறு இராணுவமயமாக்கப்பட்டிருந்ததோ, அதேபோல் தற்போது கூட இராணுவத்தின் ஆதிக்கம் நிலவுகிறது.

தென்பகுதிகளில் இவ்வளவு பெரிய அளவில் இராணுவப் படையினரின் எண்ணிக்கையோ, செயல்பாடுகளோ காணப்படுவதில்லை. ஆனால் எமது தாயகப் பகுதிகளில் மட்டுமே இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே உடனடியாக இந்த இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும். தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவத்தினரை தென்பகுதிகளுக்கு அனுப்பி, இப்பகுதிகளில் இராணுவ ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

முத்தையன்கட்டு குளத்தடியில் நடைபெற்ற குடும்பஸ்தரின் படுகொலை, இராணுவத்தினரின் அடக்குமுறையின் இன்னொரு தெளிவான சான்றாகும். இதுபோன்ற அராஜகங்களை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version