வடக்கு மாகாணத்தில் உள்ள உயர் அதிகாரிகள், வவுனியாவும் தாம் சேவையாற்றவேண்டிய மாவட்டமாக இருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. திலகநாதன் (S. Thilakanadan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்தபோது, அவர் இதைப் பற்றி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“சூடுவெந்தபுலவு பாடசாலையில், தகவல் தொடர்பாடல் பாடம் கற்பித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், 6 மாதங்கள் கடந்தும் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் அந்த மாணவர்களின் கல்வி நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
அதேபோல், செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்து நாகரிகப் பாடத்திற்கு ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை.
வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது, ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 87 கணித ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். வடக்கு மாகாணத்தில் எல்லா மாவட்டங்களும் முக்கியமானதாகும் எனவும் அவரது கருத்தில் தெரிவித்தார்.