செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காண சர்வதேச கண்காணிப்பிலான DNA தரவுத்தளம் அவசியம் எனவும் வலியுறுத்தல்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்கள், காணாமல் ஆக்கப்பட்ட திகதிகள் மற்றும் அவர்களது உயிரியல் உறவினர்களின் பெயர், தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட முழுமையான பட்டியலை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) வலியுறுத்தியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவான ICRC வெளியிட்ட புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டியுள்ள BTF, 2011ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி இலங்கையில் 15,780 பேரைத் தேடும் வழக்குகள் ICRC வசம் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக இருந்ததுடன், 1,494 சிறுவர்கள் மற்றும் 754 பெண்கள் தொடர்பான வழக்குகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்களில் 136 பேர் மட்டுமே அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் தொடர்புபடுத்தப்பட்டதாகவும் ICRC அறிக்கையை மேற்கோள்காட்டி BTF தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு 2012ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலிலும் இலங்கையில் 15,780 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக BTF சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு முழுமையான பெயர் பட்டியல்களை வழங்க வேண்டும் என இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
18,000-க்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை குறித்து கேள்வி இறுதிக்கட்டப் போரின்போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்ததாகக் கூறப்படும் 18,000-க்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை குறித்து தெளிவுபடுத்துவதற்கும், அவர்களின் பெயர்கள் மற்றும் நிலை தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கும் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தாம் கோரிக்கை விடுத்து வருவதாக BTF தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச சமூகம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கையிடமிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர் பட்டியலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
DNA தரவுத்தளம் அவசியம் காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பட்டியல் தயாரிக்கப்படுவது, செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காணும் பணிக்கு முக்கியமானதாக இருக்கும் என BTF தெரிவித்துள்ளது.
செம்மணியில் இருந்து மீட்கப்பட்டுள்ள 583 மனித எச்சங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களை, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களின் DNA மாதிரிகளுடன் ஒப்பிட்டு அடையாளம் காணும் வகையில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய DNA தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து DNA மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை ஐக்கிய இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடொன்றில் ஒப்பிடும் செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் BTF முன்மொழிந்துள்ளது.
மேலும், மனித எச்சங்கள் மற்றும் குற்றச்சம்பவ இடங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள ஏனைய தடயங்களுடன் DNA மாதிரிகளை ஒப்பிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
சர்வதேச தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும் அடையாளம் காணப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் மானுடவியலாளர்கள், நோயியல் நிபுணர்கள் மற்றும் சட்ட நிபுணர்களை உடனடியாக ஈடுபடுத்த வேண்டும் என BTF வலியுறுத்தியுள்ளது.
அனைத்து நடவடிக்கைகளும் மின்னசோட்டா நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத் தரங்களுக்கு அமைவாக இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளை செய்மதி படங்கள் மற்றும் புவியியல் தரவுகளின் ஊடாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடியாக அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இதன்படி, மண்டைதீவு உள்ளிட்ட சாட்சியங்கள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இடங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என BTF தெரிவித்துள்ளது.
குடும்பங்களின் முழுமையான பங்கேற்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் விசாரணையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அடையாளம் காணும் செயல்முறையை கண்காணிப்பதற்காக முழுமையான மற்றும் தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றம், இடம்பெற்ற குற்றங்கள், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் கட்டளைச் சங்கிலி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் காலமுறைப்படி வெளிப்படையான அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என்றும் BTF தெரிவித்துள்ளது.
மேலும், கட்டளைப் பொறுப்பு, நிறுவனப் பொறுப்பு மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதங்களுடன் பயனுள்ள தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
மீட்கப்படும் மனித எச்சங்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அகழ்வாராய்ச்சிகளில் மீட்கப்படும் மனித எச்சங்கள் உரிய உயிரியல் உறவினர்களிடம் தாமதமின்றி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், குடும்பங்கள் தங்களது இறுதி மரியாதைகளை செலுத்தி உரிய அடக்கச் சடங்குகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் BTF தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிச் செயல்முறைகளை காலவரையறைக்குள் முன்னெடுப்பதற்கான நடைமுறைப்படுத்தக்கூடிய செயல் திட்டம் ஒன்றை சர்வதேச சமூகம் இலங்கைக்கு முன்வைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நீதிச் செயல்முறையில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் BTF தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதற்காக கணிசமான அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் மற்றும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கான அங்கீகாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்றம் மற்றும் இழப்பீடு போரினால் இடம்பெயர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை அவர்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளில் மீள்குடியேற்றுவதற்கும் அல்லது மீளத் திரும்புவதற்கும் தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் BTF கோரியுள்ளது.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு–கிழக்கு பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதுடன், அப்பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணையான நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு காலம் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ள BTF, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் காலவரையறையுடன் கூடிய தெளிவான செயல் திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
