Tuesday, July 28

யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், தொற்றாத நோய்களைக் கண்டறியும் மருத்துவ முகாம் ஒன்று கரவெட்டி கிழக்கு, காட்டுப்புலம் சிவநேசன் ஞாபகார்த்த பொது நோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் அனுசரணையுடன் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, இரத்தச் சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவப் பரிசோதனைகளின் போது,

  • 41 பேருக்கு கண்பார்வை தொடர்பான பாதிப்புகள்,
  • மூவருக்கு இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்திருந்தமை,
  • ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்,
  • 19 பேருக்கு பல் தொடர்பான பிரச்சினைகள்

கண்டறியப்பட்டன.

பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பிரிந்திகா செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில், பதில் சுகாதார வைத்திய அதிகாரி ரஞ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான சிந்துஜன், ஆதவன், புவீந்திரன் மற்றும் அருட்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை ஆளுநர் சபை உறுப்பினர் சதாசிவம் சதானந்தன், சிவநேசன் நினைவு மண்டபத்தின் தலைவர் லோகேஷ்வரன் மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொற்றாத நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இம்முகாம், பிரதேச மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version