1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதியையும் சுயாதீன விசாரணையையும் வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று (23) இலண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street முன்பாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் மக்களவை ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பதாகைகள் மற்றும் கோரிக்கை வாசகங்களை ஏந்தியபடி, தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், கறுப்பு ஜூலை இனவழிப்பும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
- தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச சமூகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
- கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.
- மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
போராட்டத்தில் நிர்மலா நிருஜன் தமிழ் மக்களின் அவலநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதற்கு சர்வதேச சமூகத்தின் நேரடி தலையீடே ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தரமான நீதியையும் அரசியல் தீர்வையும் பெற்றுத்தரும் என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளை, போராட்டத்தில் கலந்துகொண்ட கார்த்திகேசு சிவகுமார், கருத்து தெரிவிக்கையில், “எங்களின் பல உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே முதல் தலைமுறையினர் இயற்கை எய்தி வருகின்றனர். இலங்கை அரசாங்கம் காலத்தை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல், எங்களின் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அழித்துக்கொண்டு செல்கிறது. அதனால்தான் சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதியை வலியுறுத்தி தொடர்ந்து போராடுகிறோம்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. மேலும், “தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்கள் குரல் ஓயாது” என்ற உறுதிமொழியுடன் போராட்டம் நிறைவடைந்தது.

