இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை ஈழத்தமிழ் மக்கள் “கரிநாள்” என உலகளாவிய ரீதியில் பிரகடனம் செய்து, தங்களின் எழுச்சிமிக்க விடுதலை உரிமைக்காக ஜனநாயக முறையில் போராடி வருகின்றனர். சுதந்திரம் எனக் கொண்டாடப்படும் நாளே, அடக்குமுறைகளின் நினைவாக மாற்றப்பட்டு, உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒரு எதிர்ப்புப் போராட்டமாக மாறியது.
ஈழத்தமிழரின் தாயகப் பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், இராணுவம், காவல்துறை, விசேட புலனாய்வுத் துறைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக தைரியமாக குரல் எழுப்பினர். அடக்குமுறைகள் அதிகரித்தாலும், போராட்டத்தின் தீவிரம் தளரவில்லை.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்போனோரின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊர்வலங்கள், மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தின.
ஊர்வலங்களில்
“காணிகளை அபகரிக்காதே”
“அரசியல் கைதிகளை விடுதலை செய்”
“சிங்கள குடியேற்றங்களை நிறுத்து”
“சர்வதேச விசாரணை நடத்துக”
எனப் பல கோஷங்கள் முழங்க, நகரங்கள் முழுவதும் போராட்டக் குரல் ஒலித்தது.
இராணுவத்தின் வழிமறிப்புகளுக்கும், காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கும், குற்றப் புலனாய்வுத் துறையின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும், இலங்கையின் சுதந்திர நாளுக்கெதிரான ஈழத்தமிழ் மக்களின் கரிநாள் போராட்டம் உறுதியுடன் நடைபெற்றது.
அடக்கப்பட்ட ஒரு இனம், தன்னுடைய விடுதலைக்காக தொடர்ந்து போராடும் என்ற உண்மையை, சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் மீண்டும் ஒருமுறை தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றனர் வடக்கு–கிழக்கு மக்கள்.
இந்தக் கரிநாள், மௌனமாக அல்ல; உரிமைக்கான உறுதியான குரலாக உலகை நோக்கி ஒலித்தது.
