யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன் போது, அகழ்வு நடைபெறவுள்ள பிரதேசத்தை நேரடியாக ஆய்வு செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, நேற்றைய தினம் மாலை சுமார் மூன்று மணியளவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்துமயான நிர்வாகக் குழுவினர் அகழ்வு இடம்பெறும் இடத்தினை நேரில் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட பகுதியில் வெள்ளநீர் புகுந்து, அகழ்வு பகுதி முழுமையாக நீரால் நிரம்பி காணப்படுவதால், அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தேங்கியுள்ள வெள்ளநீர் வற்றும் வரை காத்திருந்து அகழ்வு பணிகளை தொடங்குவது அல்லது தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தேங்கியுள்ள வெள்ளநீரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நல்லூர் பிரதேச சபையின் மூலம் வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வெள்ளநீர் அகற்றப்பட்ட பின்னர், அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான திகதி பின்னர் நிர்ணயிக்கப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்த தீர்வுகளுக்கான உரிய முகாந்தரங்களை கைவிட்டு, மக்கள் கவனத்தை திசைமாற்றும் நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக NPP அரசாங்கம் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் ஜனாதிபதி பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வந்தபோதும், செம்மணி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுகள் குறித்த விடயங்களில் பாராமுகமாக இருந்ததாக பொதுமக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
