Friday, July 18

யாழ்ப்பாணத்தில்  திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இவர்கள் திடீரென நோய் தீவிரத்தன்மை அடைந்து உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் சுவாசத் தொகுதி கடும் பாதிப்படைந்துள்ளமை மருத்துவ அறிக்கைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதேபோன்று வரணியைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சல்இ மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதேவேளை காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

நாவற்குழியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சாதாரண காய்ச்சல் நிலைமையில் இருந்த இவர்களுக்கு திடீர் என நோய் தீவிரத்தன்மை அதிகரித்தை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு நோய்த் தன்மை சடுதியாக தீவிரமடைந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நால்வரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக சோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version