Monday, January 26

சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இன்று பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது, 26.12.2024 அன்று மாலை, நகரில் தாக்குதல் நடத்தி, வானில் கடத்தும் முயற்சியொன்று இடம்பெற்றதாக அவர் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழ்ச்செல்வன், கடமை நேரத்துக்குப் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்த வந்த வாகனம், யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் வழிமறித்து, கடத்தலுக்கு முயற்சித்துள்ளது. கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்த தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன், காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளார்.

தமிழ்ச்செல்வன், வன்னியில் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தியதும், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல ஊழல்களை வெளியிட்டதன் காரணமாக தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றது. தாக்குதல் நடத்திய வானின் சாரதியை அடையாளம் காட்ட முடியுமென, தமிழ்ச்செல்வன் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, கிளிநொச்சி பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, தமிழ்ச்செல்வனுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை செய்யும் சூழ்நிலையை வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் சம்பவம், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்பான மிக முக்கியமான கேள்விகளைக் கிளப்புகிறது. உழைக்கும் ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை பயமில்லாமல் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு, பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version