Monday, January 26

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் தொழிலுக்குச் சென்ற இளைஞன், இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றது.

கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் (21) என்பவரே கொல்லப்பட்டவர். அவர் நேற்று இரவு களப்பு கடலுக்கு தொழிலுக்குச் சென்று, இன்று அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இனந்தெரியாதோர் அவரை துரத்தி, கடலிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஒருவர் தொழிலுக்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் வீழ்ந்த நிலையில் இளைஞனைக் கண்டுள்ளார். முதலில் யானை தாக்கியதாக நினைத்த அவர், இளைஞனின் தந்தையையும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரையும் அழைத்தார். அவர்கள் வந்தபோது, உடலில் வெட்டுக் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

கொக்குளாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் மூலம் சோதனை, கைவிரல் அடையாள பரிசோதனை மேற்கொள்ளவும், உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

பொலிஸார் மோப்பநாய் மற்றும் தடயவியல் குழுக்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குறித்த இளைஞனின் அத்தானை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இளைஞன் யாரால், எந்தக் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்லப்பட்ட ஜெயராஜ் சுபராஜ் சிறந்த மரதன் ஓட்ட வீரராக இருந்து, வடமாகாண அளவில் பல சாதனைகள் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version