யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான பனைமரங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (7) மாலை இடம்பெற்றது.
மாலை சுமார் 5.30 மணியளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனைமரங்கள் தீப்பிடித்ததை கவனித்த இராணுவத்தினர், உடனடியாக தீயணைப்பு வாகனத்தை அழைத்ததுடன், மருதங்கேணி இராணுவ முகாமிலிருந்தும் 200 வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீ வேகமாக பரவி, ஏனைய பனைமரங்களையும் எரித்து கொண்டிருப்பதால், இராணுவத்தினர் தீயணைக்கும் முயற்சியில் கடுமையாக செயல்பட்டு வருகின்றனர்.
கட்டைக்காடு இராணுவ அதிகாரி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது:
“இந்தப் பகுதியில் உள்ள பனைமரங்களுக்கு தீ வைப்பு இது முதல் முறை அல்ல; இதற்கு முன்பும் பலமுறை இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளனர். காரணம் எமக்குத் தெரியவில்லை. இப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி அல்ல. பொதுமக்கள் இங்கே வந்து மட்டை வெட்டுவதும், பனம்பழம் எடுப்பதும் வழக்கமாக நடக்கிறது; அதனை இராணுவம் தடுத்ததில்லை. ஆனால், சிலர் இவ்வாறான கீழ்மட்டச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அருகிலுள்ள மதுபானசாலையில் மது அருந்தி, காட்டுப்பகுதியிலிருந்து செல்லும் நபர்களே தீ வைத்திருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார்.
தற்போது பனம்பழ சீசன் நடைபெறுவதால், இந்த மரங்களிலிருந்து பயன் பெறும் மக்கள், சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
